வேலூர்: சாலை போக்குவரத்து விதிகள் கடைபிடிக்காமல் அதிவேகமாக பைக் ஓட்டி சென்று விபத்தில் சீக்கி படுகாயமடைந்து, ஊனமாக மாறும் இளைஞர்களின் எண்ணிக்கை 58 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மேலும் விபத்தில் பலியாவோர், படுகாயமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எனவே விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலக நாடுகளில் உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 20 முதல் 30 சதவீதம் வாகனங்கள் மட்டுமே முறையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயங்குகிறது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. மோட்டார் வாகன சட்டத்தின்படி 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்று 2, மற்றும் 4 சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டு கணக்கெடுப்பின்படி 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுவது 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தில் சிக்கிக் கொள்வது அதிகரித்துள்ளது. குறுகலான சாலைகளில் கூட சில இளைஞர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் செல்கின்றனர். தமிழகத்தில் ஏதாவது பகுதியில் நடைபெறும் விபத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் வேகமாக சென்று விபத்தில் சிக்குவது மட்டுமின்றி சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மோதி விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் வருகிறது. இதுகுறித்து சாலை போக்குவரத்து ஆர்வலர்கள் கூறியதாவது: வட்டாரப் போக்குவரத்து துறை சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும் விபத்துகளின் எண்ணிக்கை குறையவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்லும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் முன்பு மிதமான வேகத்தில் செல்கின்றனர். ஆனால் தனியாக சாலையில் செல்லும்போது போக்குவரத்து நிறைந்த இடங்களில் கூட மின்னல் வேகத்தில் பயணிக்கின்றனர். ஒரு சிலர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கின்றனர். மேலும் சிலர் செல்போனில் பேசிக்கொண்டு ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது இவர்களின் கவனம் செல்போனில் மட்டுமே இருப்பதால் எதிர்திசையில் வரும் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதியில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்குகின்றனர். தற்போது பல நிறுவனங்கள் அதிவேகமாகச் செல்லும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன. அதுபோன்று வாகனங்களில் பைபாஸ் சாலையில் வேகமாக பயணிக்கலாம். ஆனால் நகரப் பகுதியில் கூட வேகமாக செல்கின்றனர். சிலர் குடிபோதையில் வாகனத்தை இயக்கும்போது தாறுமாறாக சென்று விபத்து ஏற்படுத்துகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி பலர் சிறுவயதிலே கை, கால்கள் என்று உடல் உறுப்புகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். இது அவர்களது குடும்பத்தினருக்கு மிகுந்த வேதனை ஏற்படுத்துவதோடு, ஒட்டுமொத்த குடும்பத்திற்கு துயரத்தை ஏற்படுத்துகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 18 முதல் 40 வயதுக்குட்பட்ட 23 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இளைஞர்கள் சுமார் 58 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இப்படி விபத்தில் சிக்கி உடல் உறுப்புகளை இழந்தவர்கள் பலர் மிகுந்த மன உளைச்சலில் சிக்கியுள்ளனர். எனவே விபத்துகளை தவிர்க்க அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் தற்போதுள்ள சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தாலே போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.