ஆரம்ப சுகாதார நிலையம் அருகே குப்பைகளை குளத்தில் கொட்டும் அவலம்: நோய் அச்சத்தில் மக்கள்

News

ஆர்.எஸ்.மங்கலம்:  திருப்பாலைக்குடி ஊராட்சியில் குப்பைகளை நீர் நிறைந்த குளத்தில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெருக்களில் சேரும் குப்பைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறமாக உள்ள குளத்தில் கொட்டி வருகின்றனர். இந்த குளத்தில் தற்போது தண்ணீர் நிறைந்துள்ளது. இங்கு கொட்டப்பட்டு வரும் குப்பை, கூழங்கள் குளத்தில் உள்ள தண்ணீரில் கலந்து விடுவதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகின்றது. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் உள்ள பாலிதீன் கவர்கள் காற்றில் பறந்து தண்ணீரை மாசுபடுத்துகின்றது மட்டுமல்லாமல், இந்த குப்பைகளில் உள்ள பாலிதீன் பேப்பர்களை ஆடு, மாடு போன்றவை உண்டு விடுகிறது. இதனால் அவை செரிமானம் ஆகாமல் கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகளால் கொசு, ஈ போன்றவை அதிகமாக உற்பத்தியாக வருகின்றது. இந்த குப்பைகளில் உட்காரும் கொசு, மற்றும் ஈக்கள் பள்ளி மாணவ,மாணவிகள் உடலிலும் உணவிலும் உட்கார்ந்து விடுகிறது. மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளிலும் கொசு, ஈ உட்கார்ந்து விடுகிறது. அதனை வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களை கொசுகள் கடித்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊராட்சி நிர்வாகம்  குப்பைகளை கொட்டும் இப்பகுதி மிகவும் முக்கியமாக சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டிய பகுதியாகும். குப்பை கொட்டும் குளத்தின் ஒரு கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மற்றொரு கரைப்பகுதியில் விவசாயிகள் சங்கம், தினசரி மார்க்கெட், மீன் மார்க்கெட், அங்கன்வாடி பள்ளிக்கூடம், ரேசன் கடை, வாரச்சந்தை மற்றொரு பகுதியில் குடியிருப்புக்கள் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி மன்ற கட்டிடம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் இருக்கும் பகுதியில் குப்பைகளை கொட்டுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.புகாருக்கு பலனில்லைஇதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில். குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், எந்த பயனும் இல்லாமல் உள்ளது. அரசு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சுகாதாரம் காக்கவேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வரும் அரசும்,  மாவட்ட நிர்வாகமும் இந்த நீர் நிலையில் குப்பையை கொட்டுவதை நினைத்தால் மிகுந்த மன வேதனையாக உள்ளது. பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி செய்வது நியாயமா. இனிமேலாவது இந்த குளத்தில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தி விட்டு மாற்று இடத்தில் கொட்டி பொது க்களின் நலனை காக்க வேண்டும் என்கின்றனர்.

48 Days ago