A part of Indiaonline network empowering local businesses

ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு; மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

News

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு குறித்து போலீசார் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் நேற்று ஊத்துக்கோட்டை ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டிஎஸ்பி சாரதி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்  வரதராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் டிஎஸ்பி மாணவர்களிடையே பேசியதாவது, `தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கஞ்சா  உள்ளிட்ட போதை வஸ்து பொருட்களை மாணவர்கள் யாரும் பயன்படுத்த கூடாது. இந்த போதை பொருட்களை பயன்படுத்தினால் புற்றுநோய் உள்ளிட்ட பலவிதமான நோய்கள் தாக்கும். மேலும் ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தகூடாது’என பேசினார். பின்னர் மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இறுதியில் தலைமையாசிரியர் லோக்நாத் நன்றி கூறினார்.

546 Days ago