புழல்: மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. மின்வாரிய ஊழியர். இவரது மனைவி மஞ்சுளா(45). இருவரும் நேற்று மதியம் சோழவரம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு, டு வீலரில் மீஞ்சூருக்கு சென்றனர். செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, மீஞ்சூர்- வண்டலூர் சாலை வளைவில் திரும்பும்போது, பின்னால் அசுர வேகத்தில் வந்த லாரி, டு வீலர் மீது மோதியது. இதில், கீழே விழுந்த மஞ்சுளா லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். தண்டபாணி பலத்த காயமடைந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.