காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இன்று அதிகாலை மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதன்மூலம் இவ்விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகிவிட்டனர். மேலும், அடுத்தடுத்த நாட்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இதுதவிர, வெடி விபத்தில் படுகாயம் அடைந்த 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 90 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன் (50), ஜெகதீசன் (35) ஆகிய 2 பேரும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியாகிவிட்டனர். இதைத் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குருவிமலை பகுதியை சேர்ந்த ரவி (38) என்பவர் தீவிர சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக பலியானார். இதன்மூலம் காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. மேலும், தற்போதைய நிலவரப்படி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 10 பேரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 3 பேரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர் என மொத்தம் 15 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரன், மேலாளர் சுதர்சன் ஆகியோர் மீது மாகரல் போலீசார் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, உரிமையாளர் நரேந்திரனை கைது செய்து விசாரிக்கின்றனர். இவ்விபத்தில், மேலாளர் சுதர்சன் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார். மற்றொரு மேலாளர் மணிகண்டன் பலத்த தீகாயங்களுடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனக் குறிப்பிடத்தக்கது.