திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் பண்டைய கால மனிதர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்களே அதிகளவில் கிடைத்துள்ளன. பல்வேறு விதமான மண் பாத்திரங்களை செய்து அதனை சுட்டு பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கீழடியில் கிண்ணம் போன்ற சுடுமண் பாத்திரங்கள் தற்போது அதிகளவில் கிடைத்து வருகின்றன. புனல் போன்ற வடிவத்தில் உள்ள இந்த கிண்ணங்களின் அடிப்பாகத்தில் பிடிமானத்திற்காக தட்டையான அமைப்பை உருவாக்கியுள்ளனர். நான்கு அகழாய்வு தளங்களில் கீழடியில் மட்டும்தான் இதுபோன்ற கிண்ணங்கள் கிடைத்து வருகின்றன.தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்பில் கூறுகையில்,‘‘2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெசவு தொழிலில் ஈடுபட்டதற்கு சாட்சியாக நெசவு தக்களி, நெசவு குண்டு போன்றவைகள் கிடைத்துள்ளன. எனவே வண்ணச் சாயம் காய்ச்சும் பயன்பாட்டிற்காக இதுபோன்ற கிண்ணங்களை பயன்படுத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. கீழடியில் மட்டும் 7ம் கட்ட அகழாய்வில் 10க்கும் மேற்பட்ட கிண்ணங்கள் கிடைத்துள்ளன. கீழடியில் இதுவரை 7 குழிகள் தோண்டியுள்ள நிலையில், இரண்டு குழிகளில் கட்டிட சேதங்கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே கதிரேசன் என்பவரது நிலத்திலும், திலீப்கான், சந்திரன் நிலத்திலும் கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கணேசன் நிலத்திலும் கட்டிட இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வு செய்யப்படும் போது கட்டிடம் உள்ளதா இல்லையா என தெரியவரும் என்றனர்.