A part of Indiaonline network empowering local businesses

குமரி அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை-டீன் தலைமையில் நடந்தது

News

நாகர்கோவில் : கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று டீன் தலைமையில் கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.கொரோனா பரவல் அச்சம் எழுந்துள்ள நிலையில் தமிழகத்திலும் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதன் ஒரு கட்டமாக கொரோனா அவசர கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றது. ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பகல் 12 மணியளவில் அவசர கால தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவர்கள் டாக்டர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள், கொரோனா சிகிச்சை பிரிவு அலுவலர் டாக்டர் ஜாண் கிறிஸ்டோபர் உள்ளிட்ேடார் பங்கேற்றனர்.  கொரோனா பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருபவருக்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சை, சாதாரணமாக பரிசோதனைக்கு வந்தவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தால் செய்யப்பட வேண்டிய சிகிச்சை, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து சளி மாதிரி எடுத்து செய்யப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து ஒத்திகையில் விளக்கப்பட்டது. சைரன் ஒலித்தவாறு ஆம்புலன்சுகள் வருவதும், டாக்டர்கள், செவிலியர்கள் சுற்றி நின்று பரிசோதனை செய்வது போன்றதுமான ஒத்திகை நிகழ்ச்சி, மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.இது தொடர்பாக டீன் சுகந்தி ராஜகுமாரி கூறியதாவது :தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை பணிகளும், குமரி மருத்துவக்கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. 100 படுக்கை வசதிகள் கொண்ட தனி சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. இதில் 60 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி ெகாண்டவை ஆகும். இதில் 20 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவு வசதியுடன் கூடியது. மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஏற்கனவே கடைபிடித்த வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். ஏற்கனவே 2 வருடங்கள் இவற்றை நாம் பின்பற்றினோம். இடையில் சில மாதங்கள் மறந்து விட்டோம். தற்போது முறையாக மீண்டும் பின்பற்ற வேண்டும். உருமாறிய கொரோனா பாதிப்பு எந்தளவு இருக்கும் என்பது பற்றி உறுதியாக எதுவும் தெரிய வில்லை. இதுவரை வந்த கொரோனா பாதிப்பு குழந்தைகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஆனால் புதிய வகை கொரோன எப்படி என்பது தெரிய வில்லை. எனவே குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை வியாதி, கேன்சர், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகிறவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். சளி பரிசோதனை மையம் திறப்புகன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், பின்னர் அவசர சிகிச்சை பிரிவிலும் சளி பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் இருக்கும் என அச்சம் உள்ளதால், தனியாக சளி பரிசோதனை மையம் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடந்த சமயத்தில் கூட சளி பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் வந்திருந்தனர்.

271 Days ago