திருச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெருவை சேர்ந்தவர் வேலவன் (40). இவரது மனைவி பாரதி (38). குடும்ப வறுமையால் பாரதி, துபாயில் வீட்டு வேலைக்காக தனது 9 மாத குழந்தையுடன் கடந்த மார்ச் 5ம் தேதி சென்றார். அங்கு வீட்டு உரிமையாளர் வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாரதி, கடந்த மே 29ம் தேதி உயிரிழந்தார். துபாயில் ஆதரவின்றி தவித்த குழந்தையை தமிழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். அவர்கள் இதுபற்றி துபாய் திமுக அமைப்பாளர் முகமதுமீரானிடம் கூறினர். அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு தெரிவித்தார். உடனடியாக குழந்தையை தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி அவரிடமும் தமிழக அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டார். இதையடுத்து துபாய் நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நேற்று அங்கிருந்து திருச்சிக்கு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் குழந்தையை அனுப்பி வைத்தனர். இந்த விமானம் நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்சி வந்தது. அங்கு ஏற்கனவே வரவழைக்கப்பட்ட தந்தை வேலவனிடம் குழந்தையை அவர் ஒப்படைத்தார். 20 நாட்கள் துபாயில் தவித்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு வேலவன் நன்றி தெரிவித்தார்.