தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் சுற்றுலா: முக்கிய இடங்களை பார்வையிட்டனர்

News

கோவை: கோவை தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒருநாள் சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முக்கிய இடங்களை பார்வையிட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் படிப்பில் சிறந்து விளங்கும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஒருநாள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி கோவை மாவட்டடத்தில் அசோகபுரம், இடிகரை, குரும்பபாளையம், ஆத்துப்பொள்ளாச்சிம் பன்னிமடை, கிணத்துக்கடவு, சொக்கம்பாளையம், மதுக்கரை, வெள்ளமடை, வீரபாண்டி, மாக்கினாம்பட்டி உள்ளிட்ட 15 அரசு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கொடி அசைத்து சுற்றுலாவை துவக்கி வைத்தார். பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், கோவை வேளாண் பல்கலைக்கழகம், ஈஷா யோகா மையம், காஸ் வன அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு வந்த மாணவர்கள் அவற்றை பார்வையிட்டு அந்ததந்த இடங்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

33 Days ago

Download Our Free App