A part of Indiaonline network empowering local businesses

திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிக்கும் மெகா சைஸ் மணி: பக்தர்கள் பரவசம்

News

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட புஷ்பவனேஸ்வரர் - சவுந்திரநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோயிலின் கிழக்குப் பகுதியில் உள்ள மணிக்கூண்டில் பொருத்தப்பட்டிருந்த மெகா சைஸ் கோயில் மணி, 500 கிலோ எடை கொண்டது. காலை, மதியம், மாலை, இரவு என 4 கால பூஜைகளின்போது, இந்த மணி ஒலிப்பது பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருந்தது. இந்த மணியோசை கேட்டவுடன் கோயிலில் பூஜைகள் துவங்கி விட்டன என்பதை 3 கிமீ தொலைவில் இருந்தே அறியலாம்.பூஜை நடைபெறும் வேளைகளில் கோயில் மணியில் இணைக்கப்பட்டுள்ள பெரிய இரும்புச்சங்கிலியை இழுத்து, மணியை அடிக்க தனியாக ஊழியர் ஒருவர் பணியில் இருந்தார். 500 கிலோ எடையுள்ள மணி என்பதால் இதை இயக்க இரும்பு பேரிங்குகளும் பொருத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் பேரிங்குகள் மற்றும் மணியில் பழுது ஏற்பட்டதால் பிரசித்தி பெற்ற இந்த கோயிலின் மணி, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒலிக்கவேயில்லை. இதற்கான அளவுகளில் இரும்பு பேரிங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது.இன்னும் ஒரு மாதத்தில் பங்குனி திருவிழா தொடங்க உள்ள நிலையில் மதுரையை சேர்ந்த பக்தர் ஒருவர், புதிய பேரிங்குகளை வடிவமைத்து, மணியில் பொருத்தி, பழுதுகளை சரி செய்துள்ளார். இதனால் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் - சவுந்திரநாயகி அம்பாள் கோயிலிலின் திவ்ய மணியோசை மீண்டும் தற்போது ஒலித்து வருகிறது. 4 கால பூஜைகளின்போதும் தினமும் தவறாமல் கோயில் மணி ஒலிக்கப்படுவதால் திருப்புவனம் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

219 Days ago