A part of Indiaonline network empowering local businesses

நெருங்கும் பொது தேர்வுகள், படிப்பில் மூழ்கியுள்ள மாணவர்கள்; பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்வது எப்படி?.. உளவியல் நிபுணர் ஆலோசனை

News

பெரம்பலூர்: தமிழகத்தில் 2023ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 13ம் தேதி, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு 14ம் தேதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி துவங்குகிறது. இந்த தேர்வுகள் மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் இந்த தேர்வுகள் தான், மாணவ,  மாணவிகளை மேல் படிப்புகளுக்கும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பின் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லும். தேர்வுகள் நெருங்கி வருவதால், அதை எதிர்கொள்ள மாணவ, மாணவிகள் தயாராகி வருகிறார்கள். இரவு, பகலாக படிப்பில் மூழ்கி உள்ளனர். இந்த நேரத்தில் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். மேலும் பதற்றம் அடையாமல் தேர்வை எதிர்கொள்வதும் அவசியமாகும். மாணவர்கள் உடல்நலத்தை பாதுகாப்பது எப்படி, பதற்றம் அடையாமல் இருப்பது எப்படி என்பது பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவரும், உளவியல் நிபுணருமான வினோத் கூறியது: பொது தேர்வுக்காக படிக்கும் மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் மிகவும் அவசியமானது. குறித்த நேரத்தில் உணவை  உட்கொள்ள வேண்டும். அளவான தூக்கமும் அவசியமான ஒன்றாகும். தேர்வை பற்றிய பயம், பதற்றம், தேர்வு முடிவு பற்றிய சிந்தனை அவசியமற்றது. தேர்வில் எதிர்பாராமல் தேர்ச்சி பெற முடியாவிட்டாலும் உடனடித் தேர்வு, துணைத்தேர்வு உள்ளதை மறந்து விட வேண்டாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வை பற்றிய அழுத்தம் கொடுக்காமல் அவர்களை ஊக்குவிப்பது அவசியமாகும். செல்போன், சமூக வலைதளத்தில் கவன சிதறலை ஏற்படுத்தக்கூடாது. குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை உண்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். தேர்வு காலங்களில் மாணவர்கள் உடலுக்கு உபாதை ஏற்படுத்தக்கூடிய குளிர்பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். செரிமானமாகாத தின்பண்டங்கள், பாஸ்ட் புட் உணவுகளை தவிர்க்க வேண்டும். தேர்வு காலங்களில் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளுக்கு மயக்கம், வாந்தி, அம்மை, சளி, இருமல், தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்காக சுட வைத்து ஆற வைத்த நீரை பருகுவது நல்லது. உடலில் அளவுக்கு அதிகமான சூட்டை தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பெற்றோர் குழந்தைகளை தேர்வுக்காக உற்சாகப்படுத்த வேண்டுமே தவிர 24 மணி நேரமும் படி படி என்று நச்சரிக்க கூடாது. தேர்வின் முடிவுகள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை. மாணவர்கள் நம்பிக்கையுடன் தைரியம், பொறுமை, நிதானத்துடன் தேர்வெழுத வேண்டும். தேர்வின்ேபாது நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தெரிவித்ததாவது: தேர்ச்சி பெறுவோம் என்ற எண்ணத்தோடு தேர்வுக்கு செல்ல வேண்டும். 200 நாட்களில் அனைத்து பாடங்களையும் படித்து விட்டோம், வெற்றி பெறுவது எளிது என்ற எண்ணத்தோடு தேர்வறைக்கு செல்ல வேண்டும். கடந்த 10 மாதங்களாக அதிக சிறு தேர்வு, பருவ தேர்வு, திருப்புதல் தேர்வுகளை சந்தித்து தற்போது மிக தெளிவான சிந்தனையுடனும், அறிவாற்றலுடனும் இருக்கிறீர்கள் என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும்.இதுவரை எப்படி தேர்வை எதிர்கொண்டீர்களோ, அதேபோல் அரசு பொது தேர்வையும் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் பயின்ற பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கூறுகின்ற கருத்துக்களை உள்வாங்கி கொள்ளுதல் நல்லது. தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனா, பென்சில், ஸ்கேல் போன்ற எழுது பொருட்களை சரிபார்த்து எடுத்து செல்ல வேண்டும். பல வண்ணங்களில் விடைகள் எழுதுவதை தவிர்க்க வேண்டும். தேர்வு நாட்களில் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களுக்கு சென்று மனதை இலகுவாக்கி கொண்டு கற்ற பாடங்களை நினைவுப்படுத்தி கொண்டு பயமின்றி தேர்வெழுத வேண்டும். வினாத்தாள்களை முதலில் இருந்து இறுதிவரை தெளிவுபட, ‘‘வினாத்தாள் படிப்பதற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில்” வாசித்த பிறகு தேர்வை எழுதவும். அந்தந்த வினாவுக்கான விடைகளை நினைவுக்கு கொண்டு வந்து எந்த கருத்தும் விடுபடாமல் எழுதினால் அதிக மதிப்பெண் பெற முடியும். தேர்வை எழுதி முடித்த பின் அனைத்து வினாக்களுக்கும் பதில் சரியாக அளித்துள்ளோமோ என்பதை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். உங்களுடைய எழுத்துக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.  ஜூன் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நடந்த உங்கள் பாடப்பகுதிகளில் இருந்து மட்டும் தான் வினாக்கள் கேட்கப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்றார்.மனநல ஆலோசனைக்கு 14416மனநல மருத்துவர் வினோத் மேலும் கூறுகையில், தேர்வின்போது ஏற்படும் மன அழுத்தம், பதற்றம், எதிர்மறை சிந்தனை, தேர்வின் முடிவு பற்றிய கவலை ஆகியவற்றை போக்க தமிழக அரசின் இலவச மனநல ஆலோசனை எண் 14416 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்கூட்டியே ஆலோசனை பெற்று பயன்பெறலாம். அனைத்து தேர்வு மையங்களிலும் கல்வித் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வறைகளுக்கு வெளியே முதலுதவி பெட்டிகளை வைத்திருக்க வேண்டும் என்றார்.

279 Days ago