A part of Indiaonline network empowering local businesses

வாலாஜாபாத் அருகே பைக் மீது கார் மோதி வாலிபர் பலி

News

வாலாஜாபாத்: திருநெல்வேலி மாவட்டம், சிந்து பூந்துறை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர், தாம்பரம் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகரில் தங்கி, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், விக்னேஷ் வாலாஜாபாத்தில் தங்கி பணியாற்றி வரும் சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக வாலாஜாபாத் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மைதானத்திற்கு சென்றார். அப்போது, தனியார் பள்ளி அருகே காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற கார், விக்னேஷின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைபார்த்த சக வாகன ஓட்டிகள் இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்த  உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

19 Days ago