பழநியில் செல்போன் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்

News

பழநி:  பழநியில் செல்போன் பார்த்தபடியே பஸ் ஓட்டும் தனியார் பஸ் டிரைவரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் தனியார் பஸ்சின் டிரைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன். இவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு,  செல்போனை பார்த்தபடியே 15 நிமிடங்களுக்கும் மேலாக பஸ்சை ஓட்டியதாக கூறப்படுகிறது. பஸ்சில் இருந்த  பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும், தொடர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டே பஸ்சை, வேகமாக ஓட்டியதாகவும் தெரிகிறது. இதனால்  பயணிகள் அச்சமடைந்தனர். அப்போது பஸ்சில் இருந்த ஒரு பயணி, டிரைவரின் இச்செயலை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.தற்போது அந்த வீடியோ பதிவு வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பழநிக்கு தற்போது ஏராளமான  பக்தர்கள் திண்டுக்கல் சாலையில் பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர். செல்போனை பார்த்தபடி டிரைவர் பஸ்சை ஓட்டும் விபரீத  செயலால், பயணிகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பக்தர்கள், பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக  வட்டார போக்குவரத்து அலுவலர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதுடன், பஸ்சின் வழித்தட  உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

31 Days ago