A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஊரடங்கால் திசை மாறும் வாழ்க்கை பயணம் ஏழைகள், கூலித்தொழிலாளிகளை தற்கொலைக்கு தூண்டும் வறுமை: 3 மாதத்தில் உயிரை மாய்த்த 100 பேர்

News

சேலம்:  தமிழகத்தில்  கொரோனா ஊரடங்கால் துரத்தும் வறுமை ஏழைகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் உயிருக்கு உலை வைத்து வருகிறது. கடந்த 3மாதத்தில் மட்டும் 100பேர் தற்கொலை செய்து உயிரை மாய்த்ததாக அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளான ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் பலியாகி உள்ளனர். இது ஒரு புறமிருக்க நோயின் தாக்கத்தால் துரத்தும் வறுமை, பல ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளர்களை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்த வகையில் தமிழகத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் நூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளது. ஆரணியில் பசிதாங்க முடியாமல் தூக்குப்போட்டு நெசவுத் தொழிலாளி புருஷோத்தமன், சேலத்தில் கூலித்தொழிலாளி அப்ரோஸ், மாமல்லபுரத்தில் விஷமருந்தி மாற்றுத்திறன் கல்லூரி மாணவர் அந்தோணிராஜ், தாம்பரத்தில் குழந்தைகளின் பசியை போக்க முடியாமல் துடித்த தாயார் கல்பனா, மயிலாடுதுறையில் டாக்சிடிரைவர் ரவி, அருப்புக்கோட்டையில் ரயில் முன்பாய்ந்து  போட்டோகிராபர் ஜோசப் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இளம்பெண், கணவருடன் தற்கொலை செய்து கொண்ட அவலம் அரங்கேறியது.  கொரோனா காலத்தில் வறுமையை போக்க, கந்துவட்டிக்கு கடன் வாங்கினார் அந்தப்பெண். உரிய நேரத்தில் கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் படுக்கைக்கு அழைத்தனர். இதனால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று அவர் எழுதி வைத்திருந்த கடிதம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.குறிப்பாக இது போன்ற தற்கொலை முடிவுகளை எடுப்பவர்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களாகவே உள்ளனர். அதிலும் முக்கியமாக ஏழைத் தொழிலாளிகளே, அதிகளவில் விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். வாழ்க்கையில் பெரிய அளவிலான மேம்பாடுகள் எதுவும் இல்லாவிட்டாலும், கொரோனா பரவலுக்கு முன்பு, அவர்களது வாழ்க்கை பயணம் ஒரளவு சீராக சென்றது. ஆனால் கொரோனா ஊரடங்கு அவர்களின் பிழைப்புக்கு உலை வைத்ததோடு, எதிர்கால நம்பிக்கையையும் சிதைத்து விட்டது. இதுவே விபரீதங்கள் தொடர்வதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மக்கள் சமூக மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள்.இது குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த ஏப்ரல், மே மாதங்களில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஏழை, எளிய மக்களுக்கு தாமாக முன்வந்து உதவியது. இது அவர்களது வயிற்றுப்பசியை தீர்த்தது. அதன் பிறகு ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அவர்களின் பார்வை, இது போன்றவர்கள் மீது படாமல் போனது. அதே நேரத்தில் தொழிலாளிகளுக்கு எதிர்பார்த்த வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் 95சதவீத தொழிலாளர்கள், இன்றுவரை போதிய வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவம், குழந்தைகளின் கல்வி என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. இதை சமாளிக்க முடியாத நிலையில் பலருக்கு வேலையும் பறிபோயுள்ளது. இதனால் மீண்டெழுந்து வர வாய்ப்பே இல்லை என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. இதில் பலர், அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இது போன்ற சூழலில் குடும்பத்திலும் சச்சரவுகள் ஏற்படுவதால் அவர்களின் மனநிலை மாறுகிறது. இதன் காரணமாகவே ஏழை தொழிலாளர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. எனவே அரசு, இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.தன்னம்பிக்கை மிகவும் முக்கியம்‘இயல்பு வாழ்க்கை தடம் மாறும்  நேரத்தில் மனிதர்களுக்குள் ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் அவர்களை ஆக்கிரமிக்கும் போது உடனிருப்பவர்கள் ஆறுதலாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில், முதலில் நாம் எப்படியாவது மீண்டுவர வேண்டும் என்ற எண்ணமே அனைவருக்கும் பிரதானமாக உள்ளது. இதனால் சக மனிதர்களை அரவணைப்பதற்கோ, ஆறுதல் சொல்வதற்கோ வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனவே இது போன்ற நேரத்தில் தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியம். நிச்சயம் நாம் மீண்டு வருவோம் என்ற உறுதி மட்டுமே விபரீதங்களை தடுக்க வழிவகுக்கும்,’’ என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

1328 Days ago