A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கொரோனாவால் சுற்றுலா பயணிகள் வராததால் ஹோம் மேட் சாக்லெட், வர்க்கி தயாரிப்பு தொழில் பாதிப்பு

News

ஊட்டி: சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும்  ஹோம்மேட் சாக்லெட், வர்க்கி தொழில் மிகவும்  பாதிக்கப்பட்டுள்ளது.  பெரும்பாலானவர்கள் இதனை குடிசை தொழிலாக மேற்மேற்கொள்வதால், அவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு  நாள்தோறும் வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற  பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்வது வழக்கம். அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து  அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள்.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள்  தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி, படகு  இல்லம் போன்ற சுற்றுலா  தலங்களை மட்டும் பார்த்து ரசித்துவிட்டு  செல்வதில்லை. ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லெட் மற்றும்  வர்க்கி போன்ற உணவு பொருட்களையும் அதிகளவு வாங்கிச் செல்வர். பொதுவாக  யார்  வெளியூர் சுற்றுலா சென்று திரும்பினாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்  மற்றும் உறவினர்களுக்காக அந்த ஊரில்  கிடைக்கும் அல்லது தயாரிக்கும்  உணவு பொருட்கள் அல்லது கைவினை பொருட்களை  வாங்கிச் சென்று கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதுபோன்று,  ஊட்டி வந்து திரும்பியவர்களிடம் இருந்து பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பது  ஹோம் மேட் சாக்லெட்டும், வர்க்கியும். இந்த 2 உணவு  பொருட்களும் ஊட்டியில் பிரபலமாக  இருந்தாலும், குடிசை தொழிலாகவே பலரும் செய்கின்றனர். ஹோம் மேட்  சாக்கெட் தயாரிப்பில் விரல் விட்டு  எண்ணும் அளவிற்கே  தொழிற்சாலைகள் உள்ளன. பெரும்பாலான பெண்கள், இளைஞர்கள் வீடுகளிலேயே இந்த  ஹோம் மேட் சாக்லெட்டுக்களை  தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்கின்றனர். கிலோ   ரூ.200 முதல் 500 வரையில் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள்   அதிலிருந்து சற்று கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது வாடிக்கை.  அதேபோல், வர்க்கி தொழிலும் அப்படித்தான். பெரிய  தொழிற்சாலைகளில்  தயாரிப்பதில்லை. பெரும்பாலானவர்கள் சிறு அடுமனைகளை வைத்து அதில், ஊட்டி  வர்க்கி, பிஸ்கட் மற்றும் ரொட்டி  போன்றவைகளை தயாரித்து கடைகளுக்கு  கொடுக்கின்றனர். கிலோ ரூ.150 முதல் 200 வரை வர்க்கி விற்பனை  செய்யப்படுகிறது.ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீதம் பேர் இந்த  வர்க்கி மற்றும் சாக்லெட்டுக்களை வாங்கிச் செல்வது வாடிக்கையாகும். குறிப்பாக, வார  விடுமுறை நாட்கள், முதல் சீசனான ஏப்ரல் முதல் மே வரையும் மற்றும்  இரண்டாம் சீசனான செப்டம்பர் முதல் அக்டோபர் வரையும் அதிகளவு  சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், விற்பனையும்  அதிகரிக்கும். இதனால், இதனை உற்பத்தி செய்பவர்களுக்கு தொழில் இருந்துகொண்டே  இருக்கும். அதேபோல், வருவாயும் கிடைத்து வந்தது.ஆனால், கொரோனா  பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை ஊட்டிக்கு  சுற்றுலா  பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான கடைகள்  மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, ஹோம் மேட் சாக்லெட்டுக்கள் மற்றும்  வர்க்கிகளை  வாங்க ஆள் இல்லாததால் இதன் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்விரு  தொழில் செய்து வந்த பலரும் தற்போது தொழிலை நிறுத்திவிட்டு வேறு வேலைகளுக்கு  செல்ல துவங்கியுள்ளனர். இதனால், இவர்களின்  வாழ்வாதாரம், வருவாய் மட்டும்  பாதிக்கவில்லை. மாவட்டத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஒழிந்து சுற்றுலா  பயணிகள் வர மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தால்  மட்டுமே இவ்விரு தொழிலும் மேம்பாடு அடைய வாய்ப்புள்ளது.

1332 Days ago