A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

‘கவலையை மறக்க வந்தா கஷ்டப்படுத்தறாங்கப்பா’ குவார்ட்டருக்கு 5 ரூபாய் கூடுதல் வசூல் டாஸ்மாக்கை கண்டித்து ‘குடிமகன்’ மறியல்

News

நெல்லை: நெல்லையில் டாஸ்மாக் மதுக்கடையில் குவார்ட்டருக்கு ரூ.5 கூடுதலாக வசூலிப்பதை கண்டித்து குடிமகன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், பார் டெண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.5 முதல் ரூ.10 வரையும், கூலிங் பீர் வகைகளுக்கு ரூ.20 வரையும் கூடுதலாக விலை வைத்து விற்கப்படுகிறது. அதாவது, டாஸ்மாக் அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்களிடம் பணம் கறக்கின்றனர் என்பதால், வேறு வழியில்லாது கூடுதல் விலை வைத்து விற்க வேண்டிய சூழ்நிலை எழுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.டாஸ்மாக் கடைகளுக்கு மது அருந்த வருபவர்களும் சரக்கு கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் விலையை கேட்காமல் கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் மது சாப்பிடுவது யாருக்கும் தெரியக் கூடாது என நினைப்பதாலும், கொடுத்த பணத்தை கேள்வி கேட்காமல் கொடுத்து விட்டு சரக்கை வாங்கிக் கொண்டு பறந்து விடுகின்றனர். சில சமயங்களில் ஒரு புல் கேட்கும் மது பிரியரிடம் புல் இல்லை எனக் கூறி 4 குவார்ட்டர் பாட்டில்களை கொடுத்து ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதல் விலை வைத்து மொத்தமாக வசூலும் நடக்கிறது. நெல்லையில் நேற்று கூடுதல் விலை உயர்வை கண்டித்து குடிமகன் ஒருவர் தனி நபராக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவரம் வருமாறு:நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒர்க்‌ஷாப்புகள், மார்க்கெட் மற்றும் நிறுவனங்கள் அமைந்துள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இதனால் டாஸ்மாக் கடையில் விற்பனை அமோகமாக நடைபெறும்.இந்நிலையில் கடைக்கு வந்த குடிமகன் ஒருவர், விறுவிறுவென நடையை கட்டி நடுரோட்டுக்கு வந்தார். அவர், திடீரென நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் டிரைவரும் உடனடியாக பஸ்சை நிறுத்தவே அடுத்தடுத்து வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. சரி, எதற்காக இந்த தனி மனித போராட்டம் என விசாரித்த போது, கவலையை மறக்க டாஸ்மாக் கடைக்கு வந்தால், குவார்ட்டருக்கு ரூ.5 கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், அதை கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த வாலிபர் தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே அவருடன் வந்திருந்த மற்றொருவர், அந்த வாலிபரை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினார். அதன் பின்பே போக்குவரத்து சீரானது.

1184 Days ago