A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஆண்டிபட்டி பகுதியில் கடும் வறட்சியால் அழியும் முருங்கை விவசாயம்

News

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் கடுமையான வறட்சியின் காரணத்தால் தண்ணீர் பற்றாக்குறை நிழவுகிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட முருங்கை மரங்களை விவசாயிகளே வெட்டி  அழித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்நகரைச் சுற்றி அணைக்கரைபட்டி, தெற்கு மூனாண்டிபட்டி, பாலசமுத்திரம், ஏத்தக்கோவில், வரதராஜபுரம், வண்டியூர் ராமகிருஷ்ணாபுரம், கதிர்வேல்புரம், கணேசபுரம், சுப்புலாபுரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்துள்ளனர். தற்போது முருங்கை காய் சீசன் என்பதால் வழக்கத்தை விட முருங்கை காய் சிப்பம் மூட்டைகள் விற்பனைக்காக மார்கெட்டுக்கு அதிகமாக வருகிறது. இதனால் ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.5லிருந்து ரூ.12க்கு செல்கிறது. இதனால் விவசாயிகள் சிலர் முருங்கைகாய்களை ஒடிக்காமல் மரத்திலேயே விட்டுள்ளனர். மேலும் சிலர் கடுமையான வறட்சியின் காரணமாக முருங்கை மரங்களை வெட்டி அழித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயி லட்சுமணன் கூறுகையில், பல வருடங்களாக விவசாயம் செய்து வருகிறேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செழுமையாக இருந்தது. ஆனால் கடந்த 7 வருடங்களாக போதிய மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், நிலத்தடி நீரை சேமித்து வைக்கும் கனிம வளங்கள் சுரண்டப்பட்டதால் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகள் வறண்டுவிட்டது. இதனை மீறி ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறேன். ஆனாலும் விலை வீழ்ச்சி, உரம், மருந்து உள்ளிட்ட பல்வேறு செலவுகளை செய்தும் விவசாயத்தில் லாபம் கிட்டவில்லை.  ஆனாலும் விவசாயம் செய்வதற்கு மனம் ஆசையாக இருந்தாலும் மூலப்பொருளான தண்ணீர் இல்லை. ஏற்கனவே சாகுபடி செய்யப்பட்ட மரங்களை தண்ணீர் பற்றாக்குறையினால் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறேன். அதனால் முருங்கை மரங்களை வெட்டி அழித்து வருவதாக கூறினார்.

1837 Days ago