A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

ஆண்டிபட்டி பகுதியில் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது செண்டு பூ -கிலோ ரூ.40 விற்றது ரூ.5க்கு விற்பனை

News

ஆண்டிபட்டி : வரத்து அதிகரிப்பால் செண்டுப் பூ விலை வீழ்ந்துள்ளது. கிலோ ரூ.40க்கு விற்ற பூ தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆண்டிப்பட்டி வட்டாரத்தில் பிச்சம்பட்டி, கோத்தலூத்து, கன்னியப்பபிள்ளைபட்டி, மயாண்டிபட்டி, ராஜதானி, சித்தார்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் செண்டு பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை ஆண்டிபட்டியில் உள்ள பூ மார்க்கெட்டிற்கு அனுப்புகின்றனர். அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். தெய்வ வழிபாட்டிற்கும், மாலை கட்டுவதற்கும் அதிகம் பயன்படுத்தும் இந்த பூவிற்கு எப்போதும் நல்ல மவுசு உண்டு. இந்த பூவை செண்டு பூ அல்லது ஜல்லிக்கட்டு பூ என அழைப்பர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செண்டு பூவின் விலை கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மழை மற்றும் பனி குறைந்ததால் பூ வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மார்க்கெட்டில் ரூ.5 முதல் ரூ.10 வரை செண்டு பூ விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து செண்டு பூ விவசாயிகள் தெரிவிக்கையில், ‘செண்டு பூவின் விலை தற்போது 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், மிகுந்த கவலையில் உள்ளோம். பூக்களை பறித்து கிராமத்தில் இருந்து  ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டிற்க்கு கொண்டு செல்லும் வாகன கட்டணம் கூட கிடைக்கவில்லை. எனவே, அரசு செண்டு பூ விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

1143 Days ago