A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

கவர்னர் உரையில் அறிவிப்பு: வேளாண்மைக்கு தனி பட்ஜெட் டெல்டா விவசாயிகள் வரவேற்பு

News

திருச்சி: வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன்: கடந்த 10 ஆண்டுகளாக தனி நிதிநிலை அறிக்கை கேட்டு போராடி வந்தோம். ஆனால் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்போது தமிழகத்தில் முதன் முதலில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பது விவசாயிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் உற்பத்தியும், வருவாயும் இரு மடங்கு அதிகரிக்கும். சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். வேளாண் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படும். வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும். விவசாயம், தொழில் அந்தஸ்துக்கு உயரும். தேவைக்கும், உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு சீராகும். வேளாண் பொருட்களுக்கான உற்பத்தியில் தமிழ்நாடு தன்னிறைவு பெறும். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும். வேளாண் உற்பத்தி பொருட்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாகி ஏற்றுமதி நிலையை எட்ட முடியும்.  தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூ.விசுவநாதன்: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பட்ெஜட் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் அரசு கருத்துக்கேட்க வேண்டும். தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்க செயலாளர் சுந்தர விமல்நாதன்:  இந்தியாவில் விவசாயத்தை அதிகம் மேற்கொள்ளக்கூடிய பஞ்சாப், அரியானா,  சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கூட  விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை.  கடந்த 30 ஆண்டுகளாக தமிழக விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு இப்போது தான்  தீர்வு கிடைத்துள்ளது. இதை வரவேற்பதுடன், தமிழக  முதல்வரையும் பாராட்டுகிறோம். காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் திஷிதர் பாலசுப்ரமணியன்: இதன் மூலம் தமிழக விவசாயிகளின் தேவையை அறிந்து செயல்பட முடியும். நிரந்தர முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

1028 Days ago