A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட 23 மாவட்ட வேளாண் விற்பனை குழு நியமனம் ரத்து: தனி அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

News

திருச்சி:  தமிழக அரசு 23 மாவட்டங்களின் வேளாண் விற்பனை குழு உறுப்பினர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் விளைபொருள்கள் வாணிப (முறைப்படுத்துதல்) சட்டத்தின்கீழ் 23 மாவட்டங்களில் வேளாண் விற்பனை குழுக்கள் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் வேளாண் விளைபொருட்களுக்கு, சரியான மற்றும் லாபகரமான விலைக் கிடைத்தலை உறுதி செய்வதுதான் இந்த குழுவின் முக்கிய நோக்கம் ஆகும். இதை தவிர்த்து வேளாண் விளை பொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாக விற்க வசதி செய்தல், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள தரம் பிரிப்பு, சேமிப்பு வசதிகளை பயன்படுத்தி அவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வசதி செய்தல், தரம் பிரிப்பு மற்றும் சேமிப்பின் பயன்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்தல், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவைகளும் இந்த குழுவின் நோக்கம் ஆகும்.இந்த விற்பனை குழுவில் சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், இதர விவசாயிகள், விற்பனை குழு உரிமம் பெற்ற வணிகர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பெயர் பரிந்துரை செய்யப்படும் விவசாயி, வேளாண் துறை இணை இயக்குனர், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர், தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஆகியோர் என்று மொத்தம் 15 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து இதற்கான உறுப்பினர் நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் நவம்பர், டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 23 மாவட்டங்களுக்கான வேளாண் விற்பனை குழு உறுப்பினர்களை நியமனம் செய்து அதிமுக அரசு உத்தரவிட்டது. தற்போது, இந்த உறுப்பினர் நியமனங்களை ரத்து செய்து வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி சேலம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், விழுப்புரம், சிவகங்கை, மதுரை, ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், விருதுநகர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், நீலகிரி, காஞ்சிபுரம், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வேளாண் விற்பனை குழுக்களை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த 23 மாவட்டங்களில் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர்களை தனி அலுவலர்களாக நியமனம் செய்து தமிழக அரசின் வேளாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.

995 Days ago