A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

காரியாபட்டி அருகே விளைநிலத்துக்கு ட்ரோன் மூலம் பூச்சிமருந்து விவசாயிகள் வரவேற்பு

News

காரியாபட்டி: காரியாபட்டி அருகே கிராமத்தில் ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் முறைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு பெருகி வருகிறது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மேலத்துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்தையும் முதன்மை தொழிலாக கவனித்து வருகிறார். சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், பருத்தி, கத்தரிக்காய், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இதில் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த ‘ட்ரோன்’ மூலம் மருந்து தெளித்து வருகிறார்.கிருஷ்ணகுமார் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. செடிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்க ஆள் கிடைக்காததால் கூடுதல் செலவு, கால விரயம் ஏற்படுகிறது. எனவே, குறைந்த செலவில், வேலை விரைவாக முடிவதால், இந்த ‘ட்ரோன்’ முறைக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. 3 கி.மீ. தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன் மூலம், ஒரு நாளைக்கு 40 ஏக்கர் அளவில் மருந்து தெளிக்கலாம்’’ என்றார்.

953 Days ago