A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் தண்ணீர் திறப்பு: 5.52 லட்சம் ஏக்கர் நிலம் பயன்பெறும்

News

தஞ்சை: டெல்டாவில் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.  காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தாண்டு காவிரி தண்ணீர் மூலம் 3.10 லட்சம் ஏக்கரிலும், ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2.42 லட்சம் ஏக்கரிலும் மொத்தம் 5.52லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறுவை சாகுபடிக்காக கடந்த 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் அதிகாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்தது. அங்கிருந்து 9,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இரவில் தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைந்தது. நேற்று காலை நிலவரப்படி கல்லணைக்கு வினாடிக்கு 7,500 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது.இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக, நேற்று காலை 9.25 மணி அளவில் கல்லணையிலிருந்து முறைப்படி காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு ஷட்டர் பொத்தான்களை அழுத்தி தண்ணீரை திறந்து விட்டனர். பின்னர் தண்ணீரில் விதை நெல் மணிகள், பூக்களை தூவினர். காவிரி, வெண்ணாறில் தலா 2,000 கன அடி, கொள்ளிடம், கல்லணை கால்வாயில் தலா 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு 10 தினங்களில் சென்றடையும் என அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

1037 Days ago