A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஆன்லைனில் பக்தர்கள் தரிசனம்

News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆடிப்பூர பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை, ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு மூலம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தினசரி நடைபெறும் ஆறுகால பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் வழக்கம்போல நடந்து வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான சிவாச்சாரியார்கள், சமூக இடைவெளியுடன் தொடர்ந்து கோயில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவ விழா, நேற்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிறப்பு பூஜை, வழிபாடுகளுடன் சிவாச்சாரியர்கள் கொடியேற்றினர். அப்போது, அலங்கார ரூபத்தில் விநாயகர், பராசக்தி அம்மன் எழுந்தருளி காட்சியளித்தனர். அதைத்தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வளைகாப்பு நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரமோற்சவ விழாக்கள், சுவாமி சன்னதி எதிரில் உள்ள  தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். ஆனால், ஆடிப்பூர பிரமோற்சவ கொடியேற்றம் மட்டும் அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் நடத்துவது தனிச்சிறப்பாகும். இந்நிலையில், வரும் 2ம் தேதி வரை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். நிறைவாக, வரும் 2ம் தேதி அம்மனுக்கு வளைகாப்பு தீர்த்தவாரி நடைபெறும்.ஊரடங்கு காரணமாக, கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை. எனவே, தொடர்ந்து 10 நாட்களும் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை கோயில் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பப்படுகிறது. நேற்று நடந்த விழாவை பக்தர்கள் கோயில் இணையதளத்தின் மூலம் தரிசனம் செய்தனர். அதேபோல் வரும் 2ம் தேதி வரை தினமும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1364 Days ago