A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

பழநி அருகே நடந்த தொல்லியல் ஆய்வில் 30,000 ஆண்டு பழமையான கல்திட்டை கண்டுபிடிப்பு

News

* 5 டன் பிரமாண்ட பாறைகளைப் பொருத்தி அமைக்கப்பட்டது* ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழரே என நிரூபிக்கும் ஆதாரம்பழநி: பழநி அருகே ஆயக்குடியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த ஊரின் தென்புறம் உள்ளது பொன்னிமலை. இந்த மலையின் அடிவாரத்தில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் எம்பி ராஜா ரவிவர்மா, பழநியாண்டவர் கல்லூரி பேராசிரியர் அசோகன், ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் அடங்கிய குழுவினர் கல்திட்டையை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:ஆயக்குடி எனும் ஊரின் தென் எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக உள்ளது பொன்னிமலை. சங்ககால ஆய்வேளிர் என்ற குடியினர் இப்பகுதியில் வாழ்ந்ததற்கான தடயத்தை நாங்கள் கண்டறிந்தோம். இதன் தொடர்ச்சியாக பொன்னிமலை அடிவாரத்திலும் அதன் சுற்றுப்பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில் பொன்னிமலை கரட்டின் தென்கிழக்கு மூலையில், அடிவார பகுதியில் ஒரு பெருங்கற்கால நினைவுச்சின்னம் இருப்பதை கண்டறிந்தோம். இது கல்திட்டை அல்லது கல்மேடை வகையைச் சேர்ந்தது. இந்த கல்மேடை தமிழ் ஆயுத எழுத்தான ‘ஃ’ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பெருங்கற்கால காலகட்டம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடுகிறது. தமிழகத்தில் பெருங்கற்கால காலகட்டத்தை தீர்மானிப்பதில் தொல்லியல் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பெருங்கற்காலத்தில் இறந்துபோன ஒருவரின் நினைவாக இந்த ஆயக்குடி சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. இயற்கையான ஒரு பாறையின் மீது 2 உருண்டையான பாறாங்கற்களை வைத்து அவற்றை இணைக்க அதன்மேல் ஒரு மிகப்பெரிய பாறாங்கல்லை வைத்து இந்த சின்னத்தை அமைத்துள்ளனர். அத்துடன் பாறாங்கற்களுக்கு இடையே சிறிய கற்களையும் பிடிமானத்திற்கு பொருத்தி உள்ளனர். சுமார் 5 டன் எடையுள்ள இந்த பாறாங்கற்களை அமைத்த விதம் வியப்பையும், இதன் பிரமாண்டம் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.இதேபோன்ற ஒரு சின்னம் ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ஊரு’’ என்ற இடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. ஊர் என்பது தமிழ்ச்சொல். அங்கு வாழும் ஆஸ்திரேலிய பழங்குடிகள் பேசும் மொழியும் தமிழை ஒத்துள்ளது. அவர்களின் நிறம், உருவ அமைப்பு, பழக்கவழக்கங்கள் தமிழர்களையே ஒத்துள்ளன. குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாவின் கிழக்குப்பகுதியே ஆஸ்திரேலியா என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஊரு நினைவுச் சின்னம் ஆயக்குடி பொன்னிமலை நினைவுச் சின்னத்தை அச்சு அசலாக ஒத்திருப்பதால் ஆஸ்திரேலிய பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றலே என்று கணிக்கலாம். தமிழர்களின் பண்டைய ஆயுதமான ‘களரி’’ என்பதும், ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ‘பூமாரங்’ என்பதும் ஒரே வடிவமானவை. ஆஸ்திரேலிய பழங்குடிகள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் குறிகள், தமிழக சங்ககால இரவிமங்கலப் புதை குழிகளில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் அமைக்கப்பட்டிருந்த குறியீடுகளுடன் 100 சதவீதம் பொருந்துகின்றன. அண்மையில் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடமும், தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம் 130 வகையிலான டிஎன்ஏ பரிசோதனைகள், இருவருக்குமிடையே ரத்த உறவுகளை உறுதி செய்துள்ளன.ஆஸ்திரேலிய நினைவுச்சின்னத்தை அந்நாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் 30 ஆயிரம் வருடங்கள் முதல் 50 ஆயிரம் வருடங்களாக கணக்கிட்டுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் காலம் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வருடங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒப்பீட்டுக் காலக் கணிப்பு அடிப்படையில் ஆயக்குடி சின்னத்தின் காலத்தையும் இதை ஒட்டியே கணிக்கலாம். எதற்கெடுத்தாலும் 2 ஆயிரம் மற்றும் 3 ஆயிரம் என்று கணித்துக் கொண்டிருக்காமல் அறிவியல் முறைப்படி இதைப்போன்ற சின்னங்களின் காலத்தை ஆய்வு செய்து உறுதிபடுத்த நம் அரசுகள் உதவ வேண்டும். இதன்மூலம் தமிழ் மொழியின் தொன்மையை 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் செல்ல முடியும். அத்துடன் நிலவியலாளர்களின் கண்டங்களின் நகர்வு கொள்கைக்கும், லெமூரிய ஆய்விற்கும் இந்த ஆயக்குடி நினைவுச்சின்னம் உலகெங்கும் பயன்படும்.இவ்வாறு கூறினார். ()

1726 Days ago