A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

புதர் மண்டிக் கிடக்கும் அமராவதி அணை பூங்காவில் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு

News

உடுமலை :  புதர் மண்டிக்கிடக்கும் அமராவதி அணைப்பகுதியில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அமராவதி அணை உள்ளது.சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இங்கு ஏராளமான அம்சங்கள் இருந்தன. ஆனால் தற்போது அவையனைத்தும் பராமரிப்பில்லாமல் பொலிவிழந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. அதேநேரத்தில் அணை நுழைவாயில் பகுதியில் வாகனகளுக்கு நுழைவுக்கட்டணம், ஒவ்வொரு நபருக்கும் தனி கட்டணம் என்று வசூல் மட்டும் நடைபெற்று வருகிறது. அணையையொட்டி சுமார் 40 ஏக்கரில் அமைந்துள்ள பூங்கா பராமரிப்பில்லாமல் புதர் மண்டிக் கிடக்கிறது.மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றுகள் தண்ணீரில்லாமல் வறண்டும்,சேதமடைந்தும் காணப்படுகிறது. சிறுவர் விளையாட்டு உபகாரணகள் பராமரிப்பில்லாமல் உள்ளதால் சிறுவர்கள் காயமடையும் நிலை உள்ளது. அணைப்பூங்காவில் உள்ள புதர்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியிருக்கும் அபாயம் உள்ளது.மேலும் இங்குள்ள சிலைகள் சேதமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. அத்துடன் அணையின் மேல் பகுதிக்கு சென்று படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இங்குள்ள கற்றாழை பூங்கா பராமரிப்பில்லாமல் உள்ளது.பூங்காவில் காணப்பட்ட அரிய வகை மரங்கள் பலவும் படிப்படியாக காய்ந்து கொண்டிருக்கிறது. பூங்காவுக்கு எதிர்புறத்தில் அமைந்திருந்த உயிரியல் பூங்காவில் முன்பு அரிய வகை பறவைகள், வன விலங்குகள், பாம்புகள் போன்றவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. தற்போது அவை இருந்த தடம் தெரியாமல் சிதைந்து கிடக்கிறது.அமராவதி அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது இருக்கும் ஒரே ஆறுதல் முதலைப் பண்ணை மட்டுமே. ஆனால் அதற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படியானால் ஒன்றுமே இல்லாத பொட்டல் காட்டைப் பார்ப்பதற்கு அணை நுழை வாயிலில் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏன் என்பது சுற்றுலாப் பயணிகளின் கேள்வியாக உள்ளது.அணை பராமரிப்புக்கு அரசு நிதி ஒதுக்காததால் இந்த அவல நிலை உள்ளது.அரசு நிதி ஒதுக்கி பூங்கா மேம்படுத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்.அந்த வருவாய் மூலம் தொடர்ச்சியாக பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ள முடியும்.தற்போதைய நிலையில் நுழைவுக்கட்டணம்  வசூலிப்பதையாவது நிறுத்தி சுற்றுலாப்பயணிகள் மன உளைச்சலைக் குறைக்கலாமம் என்பது சுற்றுலா பயணிகளின் ஆதங்கமாக உள்ளது.

1149 Days ago