A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

வடமாநில தொழிலாளர் வழக்கில் கைதான மதுரை நீதிமன்றத்தில் பீகார் யூடியூபர் ஆஜர்: விமானத்தில் போலீசார் அழைத்து வந்தனர்

News

மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து, அவதூறு பரப்பிய பீகார் யூடியூபர், மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு தமிழ்நாட்டில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி பொய்யான கருத்துக்களையும், போலி வீடியோக்களையும் வெளியிட்டதாக பீகார் மாநிலத்திலுள்ள சச்தக் நியூஸ் என்ற யூடியூப் சேனலின் நிர்வாகி மனீஷ் காஷ்யப் (எ) டி.கே.திவாரி (32) மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.  இதுதொடர்பான வழக்கில் ஏற்கனவே பீகார் மாநிலம், சாம்பவார் மாவட்டத்திலுள்ள ஜக்தீஷ்பூர் போலீசார், மனீஷ் காஷ்யப் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். கைதான காஷ்யப்பை, பீகார் போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். விசாரணையில், பணத்திற்காக வேண்டுமென்றே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோக்களை வெளியிட்டது தெரிய வந்தது. இந்நிலையில் மதுரையிலுள்ள வழக்கு தொடர்பாக பாட்னா நீதிமன்றத்தில் அனுமதி பெற்று காஷ்யப்பை மானத்தில்  சென்னை அழைத்து வந்து, நேற்று மதுரை ஜேஎம்1 நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் டீலாபானு முன் ஆஜர்படுத்தினர். அரசுத் தரப்பில், ‘‘மனுதாரர் வெளியிட்ட வீடியோவால் பதற்றமடைந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு கிளம்பும் நிலை ஏற்பட்டது. எனவே இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்’’ என வாதிடப்பட்டது. காஷ்யப் தரப்பில் வக்கீல் நிரஞ்ஜன்குமார் ஆஜராகி எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் காவலில் அனுமதிக்கும் மனுவின் மீது உரிய உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, மாஜிஸ்திரேட் வழக்கை ஒத்தி வைத்தார்.

385 Days ago