A part of Indiaonline network empowering local businesses
Chaitra Navratri

வில்சன் கொலை வழக்கு: தீவிரவாதிகளின் கூட்டாளிகள் 6 பேர் காஞ்சிபுரத்தில் பிடிபட்டனர்....சென்னையில் வைத்து விசாரணை

News

காஞ்சிபுரம்: சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், பயங்கரவாதிகளுக்கு செல்போன் ‘சிம் கார்டு’ வழங்கியதாக காஞ்சீபுரத்தில் 6 பேர் போலீசாரிடம் சிக்கினர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் அப்துல் ஷமிம், தவுபிக் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுடன் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? என்பது குறித்து தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் இருவருக்கும் காஞ்சீபுரத்தில் இருந்து செல்போன் ‘சிம் கார்டு’ சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சீபுரத்தில் நேற்று முன்தினம் ‘கியூ’ பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள 3 செல்போன் கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த கடைகளில் இருந்து போலி முகவரி மூலம் பயங்கரவாதிகள் இருவருக்கும் ஏராளமான சிம் கார்டுகள் சப்ளை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையொட்டி அந்த 3 கடைகளின் உரிமையாளர்களையும், கடையில் பணியாற்றும் 3 ஊழியர்களையும் ‘கியூ’ பிரிவு போலீசார் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே சிம் கார்டு சப்ளை செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், சேலத்தை சேர்ந்த அப்துல் ரகுமான், அன்பரசன் ஆகிய 7 பேரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

1550 Days ago